Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதித்துள்ள முதல் அரபு நாடு

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதித்துள்ள முதல் அரபு நாடு

18 ஆனி 2026 வியாழன் 14:17 | பார்வைகள் : 200


முதல் அரபு நாடாக சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்யும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன.

2025 ஆம் ஆண்டில், முதல் நாடாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலியா அமுல்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து பிரேசில், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளும் சட்டம் கொண்டு வந்துள்ளன. இந்தியாவில் இந்த திட்டம் ஆலோசனையில் உள்ளது.

இந்நிலையில், 15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடங்களை பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதன் மூலம், இந்த தடையை அமுல்படுத்தும் முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், 15 வயதுக்குட்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட கணக்குகளை சமூக ஊடகத் தளங்கள் கண்காணித்து முடக்க வேண்டும்.

15 மற்றும் 16 வயதுடையவர்கள், வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், அறிமுகமில்லாத பயனர்களுடனான தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகள், திரை நேர மேலாண்மைக் கருவிகள் மற்றும் பெற்றோர் மேற்பார்வை அம்சங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

சுயமாக வயதை அறிவிப்பது, சரிபார்ப்பின் செல்லுபடியாகும் முறையாக ஏற்றுக்கொள்ளப்படாது. நிறுவனங்கள், டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வலுவான வயது சரிபார்ப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.

சமூக ஊடக நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.