கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் தான் அங்கே: திமுக குறித்து வைகோ ஆவேசம்!
2 ஆடி 2026 வியாழன் 10:22 | பார்வைகள் : 191
தி.மு.க., குறித்த கேள்விகளால் கடும் ஆவேசம் அடைந்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ''அந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் நடந்தது,'' என, சாடினார்.
கடந்த 2019 முதல், தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கடந்த மாதம் 27ம் தேதி, த.வெ.க., கூட்டணியில் இணைந்தார்.
தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற, ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் ராஜினாமா செய்ய விடாமல் தி.மு.க., தடுத்து விட்டதாக வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் குற்றஞ்சாட்டினர்.
இதனால், தி.மு.க., - ம.தி.மு.க., இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். தி.மு.க.,வுக்கு வைகோ துரோகம் செய்து விட்ட தாக அக்கட்சியினர் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
பதிலுக்கு, 'புதிதாக கூட்டணிக்கு வந்த கட்சிக்கு கொடுத்த மரியாதையை கூட, ம.தி.மு.க.,வுக்கு ஸ்டாலின் கொடுக்கவில்லை; நான்கு தொகுதிகளை கொடுத்து விட்டு, உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்தினார்' என, வைகோ குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே, சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வைகோ பங்கேற்றார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
ஒரு கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு, மற்றொரு கட்சிக்கு சென்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, ஜனநாயகத்தில் ஏற்கப்பட்ட ஒன்று தான்; அது குதிரை பேரத்தில் வராது.
இப்படியே ஆட்சி செய்தால், முதல்வர் விஜய், இந்த ஐந்து ஆண்டு காலம் மட்டுமல்ல; அடுத்த ஐந்து ஆண்டு காலமும் ஆட்சி செய்வார்.
கடந்த சில நாட்களாக, தி.மு.க.,வினர் இணைய தளங்களில் என்னை திட்டுகின்றனர்; வசை பாடுகின்றனர். 'ம.தி.மு.க.,வை ஒரு அறையில் அடைத்து விடலாம்' என்று சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், என் கட்சியை விட்டு சென்றவர்கள் கூட, மீண்டும் என்னிடம் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து, 'ஈ.வெ.ராமசாமி, அண்ணா துரை, கருணாநிதி போன்றவர்களுடன் அரசியல் செய்த நீங்கள், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன முதல்வர் விஜயோடு அரசியல் செய்வது சரியா' என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால், கடும் ஆவேசமடைந்த வைகோ கூறியதாவது:
யாரோ சொல்லி, இங்கு வந்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். தி.மு.க., ஆட்சியில் சதுர அடிக்கு இவ்வளவு என நிர்ணயித்து, கட்டுமான அனுமதிக்கு ஊழல் நடந்தது. அந்த ஊழலை விஜய் ஒழித்துள்ளார். தி.மு.க., ஆட்சியில், 'கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்' தான் நடந்தது.
இதையெல்லாம் நான் ஏன் முன்பே பேசவில்லை என்றால், அதற்கு காரணம், கூட்டணியில் இருந்து கொண்டே, தி.மு.க.,வை எதிர்த்து எப்படி பேசுவது; அப்படி பேசினால் அயோக்கியத்தனமாக இருக்கும். கூட்டணிக்குள்ளேயே இருந்து பேசுவது என்ன அரசியல் தர்மம்; கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று, வைகோவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான கேள்விகள் தொடரவே, அவர் கோபத்தின் உச்சத்திற்கே போனார். கேள்வி கேட்டவர்களை வெளியேறுமாறு சத்தம் போட்டார். அதைத்தொடர்ந்து, காவல் துறையினர் தலையிட்டு, அனைவரையும் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் , நடந்த சம்பவத்திற்கு நேற்றிரவு வைகோ வருத்தம் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan