Paristamil Navigation Paristamil advert login

வீட்டு பிரசவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் கணவர் மீது கொலை வழக்கு பதியப்படும்; அமைச்சர் அருண்ராஜ்

வீட்டு பிரசவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் கணவர் மீது கொலை வழக்கு பதியப்படும்; அமைச்சர் அருண்ராஜ்

2 ஆடி 2026 வியாழன் 06:01 | பார்வைகள் : 184


வீடுகளில் பிரசவம் பார்த்து பெண்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உலக ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்யும் வகையில், 'க்யூஆர் கோடு' வசதி மற்றும் என்ற இணையதள சேவையை, அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். மேலும், 50 முறைக்கு மேல் ரத்த தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

பின், அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்தாண்டு, 4.50 லட்சம் யூனிட் ரத்த சேகரிப்பு இலக்காக வைத்து, 4.51 லட்சம் யூனிட் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் ரத்தத்தால், நான்கு பேரை காப்பாற்ற முடியும்.

ரத்தத்தில் இருந்து சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகிய நான்கும் பிரித்தெடுக்கப்பட்டு, தேவையான நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இவ்வாறு பிரித்து வழங்குவது,  தமிழகத்தில், 70 சதவீதமாக உள்ளது. அவற்றை, 100 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

கோவையில் வீட்டில் பிரசவம் பார்த்ததால் உயிரிழப்பு நடந்துள்ளது. 'யூ டியூப்' பார்த்து, வீடுகளிலேயே பிரசவம் பார்க்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் தான், 100 சதவீத பிரசவங்கள் நடக்க வேண்டும். குழந்தை பிறப்பு சந்தோஷமான ஒன்று. அதை விபரீதமாக முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.

வீடுகளில் பிரவசம் பார்ப்பதை, சட்டப்படி குற்றமாக கருதும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும். குறிப்பாக, வீடுகளில் பிரசவம் பார்த்து உயிரிழந்தால், வேண்டுமென்று செய்ய விட்டாலும், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.