Paristamil Navigation Paristamil advert login

கொங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கொங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

16 வைகாசி 2026 சனி 15:38 | பார்வைகள் : 384


கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருவதாக ஆபிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை  80ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிக காய்ச்சல், உடல் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, உடலில் இருந்து இரத்தம் கசிதல் போன்றன இந்த நோய்க்கான அறிகுறிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இம்முறை பரவி வருவது 'புண்டிபுக்யோ' என்ற எபோலா வைரஸ் வகையாகும். இந்த நோய்க்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் இல்லாததால், நோயைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான உகாண்டா போன்ற நாடுகளுக்கும் இந்நோய் பரவும் அபாயம் காணப்படுவதால், சுகாதாரப் பிரிவினர் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நோய் முதன்முதலில் 1976ஆம் ஆண்டு கொங்கோவில் கண்டறியப்பட்டது. இது வெளவால்களிடமிருந்து பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒருவரின் உமிழ்நீர், இரத்தம் போன்ற உடல் திரவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

நோயின் ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், உடல் வலி, கடுமையான தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை ஏற்படும்.

அடுத்தடுத்த கட்டங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் தடிப்புகள் ஏற்படுதல் மற்றும் உடலில் இருந்து இரத்தம் கசிதல் போன்ற கடுமையான அறிகுறிகள் தோன்றும்.  

எபோலா நோய்க்கு இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுடன், இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 50 சதவீதமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் பரவும் பகுதிகளில் உள்ள மக்கள் அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதனாலும், தங்கச் சுரங்கங்களில் பணிபுரிவதனாலும் இந்நோய் மேலும் பரவக்கூடிய தீவிர ஆபத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் எல்லைப் பகுதிகளைக் கண்காணிப்பதற்கும் கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   செய்தி தொகுப்பு