Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.,வில் இரு தரப்பினரும் ஆள் இழுப்பு!

அ.தி.மு.க.,வில் இரு தரப்பினரும் ஆள் இழுப்பு!

16 வைகாசி 2026 சனி 10:27 | பார்வைகள் : 259


அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட செயலர் பதவியை தக்க வைக்க பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோர், 'கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தான்...' என கூறி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 47 இடங்களில் வென்றது. அவர்களில் 25 பேர், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் த,வெ.க., அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது.

இந்நிலையில், வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்த 25 மாவட்ட செயலர்களை, அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதியவர்களை பழனிசாமி நியமித்துள்ளார். அ.தி.மு.க.,வில் பொதுச்செயலருக்கே அதிக அதிகாரம் என்பதால், நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய செயலர்கள் மற்றும் பொதுக்கு ழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பழனிசாமி மற்றும் வேலுமணி தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இரு தரப்பினரும் நிர்வாகிகளிடம் தங்களுக்கு ஆதரவாக கையெழுத்து பெற்று வருவதால், அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்களுடன் நேற்று பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், புதிதாக நியமிக்கப்பட்ட 25 மாவட்ட செயலர்களும் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய பழனிசாமி, 'கட்சி நம்மிடம் தான் உள்ளது' என நம்பிக்கையூட்டும் வகையில் கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகம் வீட்டில், அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சி பொறுப்பு களிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்துள்ளனர்.

இது தொடர்பாக, வேலுமணி வெளியிட்டு உள்ள அறிக்கை:

உண்மையை உணராமல் பழனிசாமி எங்களை விமர்சித்து அறிக்கை விட்டிருப்பது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பழனிசாமியின் பிரசார உழைப்பை, எந்த இடத்திலும் யாரும் மறுத்து பேசவில்லை.

தேர்தல் தோல்விக்கு பின்னும், 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலையில் பழனிசாமி பேசி வருவதை, உணர்வுள்ள எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு, அ.தி.மு.க.,வின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளோம். யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, அ.தி.மு.க.,வை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.

இப்போதும் பழனிசாமி அழைத்தால் பேசுவதற்கு நாங்கள் தயார். கட்சியின் பொதுச் செயலர், அவர் தான். தோல்விக்கான காரணங்களை எல்லாரும் சேர்ந்து ஆராய்வோம். அ.தி.மு.க.,வின் எதிர்கால பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் இருந்து கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை வந்த பின், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

சட்ட உதவி வழங்க தி.மு.க., முடிவு

த.வெ.க.,வுக்கு ஆதரவளித்துள்ள அ.தி.மு.க.,வின் 25 எம்.எல்.ஏ.,க்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், த.வெ.க., அரசு நிலைத்து விடும் என தி.மு.க., நினைக்கிறது. எனவே, அந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய, தி.மு.க., தயாராகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதனால் தான், 'கட்சி தலைமை சொல்பவரைத்தான் கொறடாவாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்பதே விதி' என, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

பழனிசாமிக்கு எதிராக 'போஸ்டர்'

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதவி விலகக்கோரி, அவரது சொந்த ஊரான சேலம் நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள், பழனிசாமியின் வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு பதிலடியாக பழனிசாமி ஆதரவாளர்கள், 'முதுகில் குத்திய துரோகிகளை களை எடுப்போம்; அ.தி.மு.க.,வை காப்போம்' என, போஸ்டர் ஒட்டியுள்ளனர்.