Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கலான நிலைமை: சொல்கிறார் ஈரான் அமைச்சர்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கலான நிலைமை: சொல்கிறார் ஈரான் அமைச்சர்

16 வைகாசி 2026 சனி 08:55 | பார்வைகள் : 284


ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கலான நிலைமை நிலவுகிறது. அப்பகுதியில் அனைத்து கப்பல்களும் கடப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்அராக்சி கூறியுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நம்பிக்கையின்மை காரணமாக பேச்சுவார்த்தை சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அமெமரிக்காவை  நம்பாததற்கு ஈரானிடம் பல காரணங்கள் உள்ளன.  ஆனால், ஈரானை நம்புவதற்கு அமெரிக்காவிற்கு பல காரணங்கள் உண்டு. ஈரான் தொடர்பாக எந்த பிரச்னைக்கும் ஆயுதங்களால் தீர்வு காண முடியாது.

பேச்சுவார்த்தையில்  ஏற்படும் முடிவை தவிர வேறு எந்த முடிவும் மேற்காசியாவில் நிலவும் பிரச்னைக்கு உகந்ததாக இருக்காது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து கப்பல்களும் கடப்பதற்கு உதவி ஈரான் தயாராக உள்ளது. தற்போது அந்த பகுதியில் நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ளது.    அணு ஆயுதங்களை ஈரான் எப்போதும் விரும்பியதில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறலால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தை நடக்கும் போதே அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  அவர்கள் எத்தனை முறை எங்களை சோதனை செய்தாலும், மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை.  அமெரிக்காவின் தடை ஈரானின் உறுதிப்பாடு மற்றும் கொள்கையை மாற்றாது.

40 நாட்கள் நடந்த போருக்கு பிறகு, ஈரானில் எதையும் சாதிக்க முடியாது என தெரிந்து கொண்டுள்ள அமெரிக்கா தற்போது பேச்சுவார்த்தை நடத்துகிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு மறுதரப்பும் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்கா மீது எங்களுக்கு  நம்பிக்கையில்லை.

மேற்காசிய விவகாரத்தில்  இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஈரான் வரவேற்கிறது. பாகிஸ்தான் செய்துவரும் மத்தியஸ்தம் இதுவரை  தோல்வி அடையவில்லை.

இந்தியா உடனான உறவுக்கு நாங்கள் எப்போதும் முக்கியத்தவம் அளித்து வருகிறோம்.   பண்டைய நாகரீகம் முதல் இரண்டு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளது. வலிமையான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு உள்ளது.  சிறந்த அரசியல் உறவும், ஆலோசனையும் நடக்கிறது. இரு நாடுகளில் பரஸ்பர நலன் மற்றும் மரியாதை அடிப்படையில் இரு நாடுகளும் உறவையும் , நட்பையும் தொடர உறுதி பூண்டுள்ளன. இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.