Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால தடுப்புக்காவல்: புதிய குடியேற்றச் சட்டம்!!

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால தடுப்புக்காவல்: புதிய குடியேற்றச் சட்டம்!!

17 ஆனி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 511


சட்டவிரோதமாக தங்கியிருந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டவர்களை நிர்வாக தடுப்புக்காவலில் வைக்கும் காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதாவை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. 16ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 345 ஆதரவு வாக்குகளும் 177 எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகிய நிலையில், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், வலதுசாரிகள் இதனை 2024ம் ஆண்டு இடம்பெற்ற பிலிப்பைன் என்ற இளம்பெண்ணின் கொலைச் சம்பவத்திற்கான பதிலடி நடவடிக்கையாக விளக்கியுள்ளன.

Renaissance கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Charles Rodwell,  முன்வைத்த இந்தச் சட்டத்திற்கு அரசு, வலதுசாரிகள் மற்றும் தேசிய ஒன்றியம் கட்சி ஆதரவு வழங்கியுள்ளன. உள்துறை அமைச்சர் Laurent Nunez, “இந்த துயர சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நிர்வாக குறைபாடுகளைச் சரிசெய்யும் முயற்சியே இது” எனக் கூறினார்.

பிலிப்பைன் கொலை வழக்கில் சந்தேகநபராக உள்ள மொராக்கோ நாட்டு நபர், நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே குற்றச்சாட்டில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாக தடுப்புக்காவலின் அதிகபட்ச காலம் 90 நாட்களாகவும், பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு 180 நாட்களாகவும் உள்ளது. புதிய சட்டத்தின் கீழ், நாட்டின் பொது ஒழுங்கிற்கு “உண்மையான மற்றும் கடுமையான அச்சுறுத்தல்” எனக் கருதப்படும் வெளிநாட்டவர்களுக்கு இந்தக் காலம் விசேடமாக 210 நாட்கள் வரை நீட்டிக்கப்படும்.

எனினும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் பயனற்றது என விமர்சித்துள்ளன. அதேவேளை மனித உரிமை அமைப்புகள், தடுப்புக்காவல் மையங்களில் நிலவும் மோசமான சூழ்நிலைகள் மற்றும் நீண்டகால காவல் நடைமுறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளன.