Paristamil Navigation Paristamil advert login

அதிமுக - எம்எல்ஏக்கள் ராஜினாமா சிபிஐ விசாரணை கேட்ட மனு தள்ளுபடி

அதிமுக - எம்எல்ஏக்கள் ராஜினாமா சிபிஐ விசாரணை கேட்ட மனு தள்ளுபடி

17 ஆனி 2026 புதன் 08:54 | பார்வைகள் : 196


அதிமுக - எம்எல்ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில், குதிரை பேரம் நடந்துள்ளதாக கூறி, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழக சட்டசபையில், மே 13ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த, 25அதிமுக - எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய,அதிமுக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அது நிலுவையில் இருந்தபோது, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்ட மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில், தவெகவில் இணைந்து உள்ளனர்.

அவர்களுக்கு தலைமை செயலகத்தில் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் நான்கு பேருக்கும், 'சீட்' வழங்கப்பட உள்ளதாக, நம்பப்படுகிறது.

அரசியல் லாப நோக்குடன், நான்கு எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் நடந்த குதிரை பேரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வெறும் யூகம், சந்தேகத்தின் அடிப்படையில், எந்த அதாரங்களும் இல்லாமல், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுப்படையான தெளிவில்லாத, முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

மனுதாரரின் நம்பிக்கை அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது; குற்றத்துக்கான ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.