Paristamil Navigation Paristamil advert login

பாஜவின் அடுத்த இலக்கு; தமிழகம் 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

பாஜவின் அடுத்த இலக்கு; தமிழகம் 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

16 ஆனி 2026 செவ்வாய் 11:49 | பார்வைகள் : 172


மேற்கு வங்கத்தில் ரவுடி அரசியலை மக்கள் துணையுடன் அகற்றி விட்டோம்; அடுத்து, எங்கள் குறி தமிழகம் தான்,' என, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., மைய குழு கூட்டம், அமித் ஷா தலைமையில் சமீபத்தில் டில்லியில் நடந்தது. அதன் பின், அவர் தனக்கு நெருக்கமான சில முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது அமித் ஷா கூறியுள்ளதாவது:

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி, ரவுடிகளை வைத்து, அராஜக அரசியலில் ஈடுபட்டார். அவரது ஆட்சியை, மக்கள் துணையுடன் பா.ஜ., அகற்றி விட்டது. அடுத்த இலக்கு தமிழகம் தான். பிரதமர் மோடியை, தமிழக மக்கள் விரும்புகின்றனர். அதை, பா.ஜ.,வுக்கான ஓட்டுக்களாக மாற்ற வேண்டும்.

மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, மாநில தலைமை ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க வேண்டும். வரும் 2029 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கான பணிகளை, இப்போதே தொடங்க வேண்டும்.

இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு பின், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் அனுப்பப்படுவர். அவர்களை, விவசாயிகள் உள்ளிட்டோரை சந்திக்க வைத்து, மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதோடு, த.வெ.க., அரசின் தவறுகளையும் மக்களிடம் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.