தொழில் தொடங்க அனுமதி பெறுவதில் புதிய விதியை அமல்படுத்துகிறது அரசு
16 ஆனி 2026 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 200
ஆந்திர மாநிலத்தின் போட்டியை சமாளிக்க, தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒற்றைச்சாளர இணையதளத்தில் விண்ணப்பித்து, 21 நாட்களுக்குள் அரசு துறைகள் அனுமதி தரவில்லை எனில், தானாகவே அனுமதி அளிக்கப்பட்ட விதியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க விரும்பும் நிறுவனங்கள், அரசின் பல துறைகள், பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, தமிழக ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக, 30க்கும் மேற்பட்ட அரசு துறைகள் சார்ந்த, 200க்கும் அதிகமான வணிக அனுமதிகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.
இந்த அனுமதியை குறித்த காலத்தில் வழங்க, அரசு முடிவு செய்துஉள்ளது. இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒற்றைச்சாளர இணையதளத்தில் விண்ணப்பம் செய்த பின், அது சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதிக்கு இணையதளம் வாயிலாக பதிவாகும். அந்த துறையில் அனுமதி கொடுக்க வேண்டும்.
ஆனால், கட்டட அனுமதி உள்ளிட்டவை தாமதம் செய்யப்படுகின்றன. விண்ணப்பங்களுக்கு 21 நாட்களில் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அனுமதி தரவில்லை எனில், தானாகவே அனுமதி அளிக்கப்பட்டதாக கருதலாம் என்ற விதி ஏற்கனவே உள்ளது. ஒரு துறையில் இருந்து, விண்ணப்பித்த நிறுவனத்திடம் ஏதேனும் விளக்கம் கேட்டால், அதற்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.
பின், புதிய விளக்கங்களை கேட்கக் கூடாது. இவை சரிவர பின்பற்றப்படாமல் உள்ளன. தற்போது, முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு ஆந்திரா கடும் போட்டி தருகிறது. எனவே, தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில், ஒற்றைச்சாளர இணையதளத்தில் விண்ணப்பித்து, 21 நாட்களில் அரசு துறைகள் அனுமதி தரவில்லை எனில், தானாகவே அனுமதி அளிக்கப்பட்டதாக கருதும் விதியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் அழைத்து பேசி, விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan