Paristamil Navigation Paristamil advert login

தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம் என்ன? ஸ்டாலினிடம் அறிக்கை ஒப்படைப்பு

தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம் என்ன? ஸ்டாலினிடம் அறிக்கை ஒப்படைப்பு

16 ஆனி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 183


சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்வி குறித்த கள ஆய்வு அறிக்கை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

தி.மு.க., தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆராய, 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களில், 36 பேர் இடம் பெற்றனர். தமிழகம் முழுவதும் பயணம் செய்து, தொகுதி வாரியாக, அக்குழுவினர் அறிக்கை தயாரித்தனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நடந்த கள ஆய்வு தொடர்பான அறிக்கை, மாவட்ட வாரியாக, ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், 'கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களை, கூட்டணி கட்சியினர் நிறுத்தி உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை ஒதுக்கும்போது, அவர்களின் செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பை, அடிமட்ட அளவில் ஆராய்ந்து முடிவு எடுக்காமல் கோட்டை விட்டுள்ளோம்.

'தேர்தல் வியூக நிறுவனத்தின் ஆலோசனைப்படி, கட்சி நிர்வாகிகளை வேலை வாங்கியதும், தேர்தலில் தி.மு.க., அடைந்த தோல்விக்கு காரணம்' என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக, கள ஆய்வுக்குழுவில் இடம் பெற்ற, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., எழிலரசன் கூறுகையில், “மக்களை, பல வகைகளில் சந்தித்து, ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் என, 140 மணி நேரம் ஆய்வு நடத்தினோம்.

நேரடியாக பெற்ற கருத்துகள், கடிதங்கள் வாயிலாக பெற்றவை என சேர்த்து, 6,620 பக்கங்களுக்கு கருத்துகள் வந்துள்ளன. “அவற்றை படித்து குறிப்பெடுத்து, அதை 476 பக்க அறிக்கையாக தயாரித்து உள்ளோம். அதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் வழங்கி இருக்கிறோம்,” என்றார்.