Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்

10 வைகாசி 2026 ஞாயிறு 10:27 | பார்வைகள் : 252


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில், மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை தோற்கடித்த வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 9 ஆம் திகதி “வெற்றி தினம்” கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, மே 9 முதல் 11 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட உள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நேரடியாக தொடர்பு கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் போரை தற்காலிகமாக நிறுத்துமாறு தாம் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்ததாகவும், இந்த முடிவை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “இது போரின் முடிவை நோக்கி எடுத்த முக்கிய தொடக்க நடவடிக்கையாக நான் கருதுகிறேன்.

அமைதிக்கான நாளை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த தற்காலிக போர் நிறுத்த காலத்தில் இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.