Paristamil Navigation Paristamil advert login

மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம்! விசாரணையில் சிக்கும் அபாயம்

மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம்! விசாரணையில் சிக்கும் அபாயம்

9 வைகாசி 2026 சனி 15:32 | பார்வைகள் : 219


எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடிதம் இன்று (09) தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

விசாரணைகளின் போது, அந்த தொகையில் ஒரு பகுதி அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், மேலும் 60 மில்லியன் ரூபாய் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன தெரிவித்திருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த வாக்குமூலம் அச்சுறுத்தலின் கீழ் பெறப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம் தாக்கல் செய்து எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.