Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., அ.தி.மு.க. இணைந்து அரசை உருவாக்கினால்... அதிரடி காட்ட தயாரான த.வெ.க.

தி.மு.க., அ.தி.மு.க. இணைந்து அரசை உருவாக்கினால்... அதிரடி காட்ட தயாரான த.வெ.க.

8 வைகாசி 2026 வெள்ளி 09:47 | பார்வைகள் : 234


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன.  இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  

காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.  த.வெ.க.வின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.  எனினும், அதில் முடிவு ஏற்படாமல் உள்ளது.. இந்த சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.  

இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.  ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவித்தது.  எனினும், விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை..

ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வரும்படி கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.  அப்படி பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும், அக்கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காதது சர்ச்சையானது.  இந்த நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. 118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை.

விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் என்று கூறினார். .ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன்.  தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார்.தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது என முன்பு, தகவல் ஒன்று வெளியானது.  

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது.  இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்தது.  எனினும், தி.மு.க. இதனை மறுத்தது. .ஆனால், அ.தி.மு.க. கருத்து தெரிவிக்காமலே இருந்து வருகிறது.  த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று அ.தி.மு.க. தெரிவித்து விட்டது.  

இதனை அடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியானது.விஜய் ஆட்சியமைக்க இடையூறு செய்யமாட்டோம் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.  எனினும், மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.. ஆட்சி அமைக்க வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்தனர்.  

அப்போது, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது.இதேபோன்று, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலைவர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.  அதனால், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 10-ந்தேதி வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சியை தக்க வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.  

மற்றொரு தேர்தலை நடத்த வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு.  மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், நிலையான அரசு ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.. அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும்போது அதனை அங்கீகரிக்க  வேண்டும் என்றார்.  இதனால், எந்த வகையான முடிவை வருங்காலத்தில் அக்கட்சி எடுக்கும் என்று கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.இந்த சூழலில், தி.மு.க.வில் உதயநிதி தலைமையிலான அணியின் இளம் தலைவர்களில் சிலர், விஜய் ஒருமுறை ஆட்சியை பிடித்து விட்டால், எம்.ஜி.ஆரை போன்று அவரை அகற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகி விடும் என அச்சப்படுகின்றனர்.  

எம்.ஜி.ஆர். ஆட்சியமைத்த பின்னர், தி.மு.க.வை அதிகாரத்திற்கு வர விடவில்லை என்பதே அதற்கு காரணம்.  கட்சியில் உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இதனை நம்ப முடியாமல் உள்ளனர்.  இரு திராவிட கட்சிளுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்வினையாற்றி ஒரே நிலைக்கு கொண்டு சென்று, பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு விட்ட வருத்தத்தில் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க. அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.  அதற்கேற்ப கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்வார்கள் என கூறப்படுகிறது.  தனிப்பெரும் ஒற்றை கட்சியாக த.வெ.க. உள்ளது.  108 இடங்களை பிடித்துள்ளது.  

த.வெ.க.வை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என கூறுகிறது.அப்படியில்லாமல் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால் 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வார்கள் என த.வெ.க. எச்சரித்து உள்ளது.