Paristamil Navigation Paristamil advert login

மு.க.ஸ்டாலின் தோல்விக்கு யார் காரணம்?: புலன் விசாரணையில் இறங்கிய மனைவி துர்கா

மு.க.ஸ்டாலின் தோல்விக்கு யார் காரணம்?: புலன் விசாரணையில் இறங்கிய மனைவி துர்கா

8 வைகாசி 2026 வெள்ளி 11:29 | பார்வைகள் : 118


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்தது. முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினே மேடைக்கு மேடை இதை கூறிவந்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினே அதிர்ச்சி தோல்வி கண்டார். அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில், தோல்வியடைந்த மறுநாளே (5-ந் தேதி), கொளத்தூர் தொகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின் தோல்விக்கு தி.மு.க. நிர்வாகிகளே காரணம் என்ற தகவல் கட்சித் தலைமைக்கு புகாராக வந்தடைந்தது. அதே நேரத்தில், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவும், தனது கணவர் தோல்விக்கு யார் காரணம்? என்பதை ரகசியமாக கண்டறியத் தொடங்கினார். கொளத்தூர் தொகுதி உருவான 2011-ம் ஆண்டு முதல், 3 முறை நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த முறை முதல்-அமைச்சராக அந்தத் தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டுவந்தார்.

கொளத்தூர் தொகுதியில் சிறப்புப் பள்ளிகள், மருத்துவமனைகள், நவீன நூலகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். மாதம் இருமுறை தொகுதி மக்களைச் சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.இத்தனை செல்வாக்கு இருந்தும், 4-வது முறையாக போட்டியிட்டபோது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் ஒரு பக்கம் தி.மு.க.வினர் சோர்ந்து போயிருந்தாலும் மற்றொரு புறம் அதற்கான உண்மை காரணத்தை கண்டறிய மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா களம் இறங்கினார். முன்பு பொங்கல் மற்றும் திருமண விழாக்களில் தான் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களை போன் மூலம் தொடர்புகொண்டு பேசி, நடந்தவற்றை விசாரித்துள்ளார்.

அப்போது, துர்கா ஸ்டாலினிடம் பல குற்றச்சாட்டுக்குள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தொகுதிப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கடிதங்கள் படிக்கப்படாமலே குப்பையில் வீசப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டன. அதேபோல், கட்சி நிகழ்ச்சிகளில் தொகுதி மக்களைக் காட்டாமல், வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து கூட்டத்தைக் காட்டி மு.க.ஸ்டாலினை நிர்வாகிகள் ஏமாற்றியுள்ளனர்.

மேலும், தொகுதியில் உண்மையாகவும், தன்னார்வத்துடனும் பணியாற்ற முன்வந்த நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று தி.மு.க.வினர் முறையாக வாக்கு சேகரிக்கவும் இல்லையாம். இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கேட்டு அதிர்ச்சியடைந்த துர்கா ஸ்டாலின், இதுகுறித்து கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்ததுடன், அதற்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளாராம். அதன் அடிப்படையில், கொளத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.