Paristamil Navigation Paristamil advert login

ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் தவெக புதிய கடிதம்

ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் தவெக புதிய கடிதம்

6 வைகாசி 2026 புதன் 04:14 | பார்வைகள் : 337


ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரிடம் தவெக புதிய கடிதம் அனுப்பி உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட தவெக எம்எல்ஏக்கள் பற்றிய விவரத்தை விரைவில் அக்கட்சி தலைமை தெரிவித்த பிறகுதான் எதையும் முடிவு செய்வேன். சந்திப்பு தேதி எதுவும் முடிவு செய்யவில்லை என்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறி உள்ளார்.

தமிழக 'சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. கட்சியில் வென்றவர்களில் யாரை அமைச்சரவையில் சேர்க்கலாம், என்ன துறைகள் ஒதுக்குவது, முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்து விஜய் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மே 7ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடத்த விஜய் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. இந் நிலையில் தவெக தரப்பில் எத்தனை பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர் என்பது பற்றிய எந்த விவரங்களையும் அக்கட்சியினர் தமக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தவெக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. தகவல்களை மட்டுமே அவர்கள் அனுப்பி உள்ளனர். அதிலும் எத்தனை சதவீதம் மக்கள் தங்களுக்கு ஓட்டுளித்தனர் என்பதை மட்டுமே அனுப்பி இருக்கின்றனர். எத்தனை எம்எல்ஏக்கள் தங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் எதுவும் என்னிடம் கூறவில்லை.

ஆனால் இந்த விவரங்கள் போதுமானதாக இல்லை என்று நான் கூறிவிட்டேன். அலுவல் ரீதியாக முறையான தகவல்களுடன் அணுகுமாறு தெரிவித்துள்ளேன். அவர்கள் அவ்வாறு செய்வார்கள். அதன் பிறகே நான் முடிவு எடுக்க முடியும்.

மே 7 அல்லது மே 8 ஆகிய தேதிகளில் என்னை அவர்கள் வந்து சந்திப்பதாக எந்த தகவல்களும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் பற்றிய விவரங்களை என்னிடம் அளித்தபிறகே அதுபற்றி முடிவெடுக்கமுடியும்.

இவ்வாறு பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.

கவர்னர் கேட்ட விபரங்களுடன் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி புதிய கடிதம் வழங்கப்பட்டுள்ளது.