2025-26ல் அமலாக்கத்துறை முடக்கியது ரூ.81,000 கோடி!
3 வைகாசி 2026 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 1417
அமலாக்கத் துறையின் 2025-26ம் நிதியாண்டுக்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, துறையின் கைது நடவடிக்கை முந்தைய நிதியாண்டை காட்டிலும் 27 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 81,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை முடக்குதல், கைது நடவடிக்கை ஆகியவற்றில் இந்த சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் பெறுவது கடினம்.
இந்நிலையில், 2025-26 நிதியாண்டில், அமலாக்கத் துறை சார்பில் அதன் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் அறிக்கையை ஆய்வு செய்து, தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த நிதியாண்டில், 156 பேரை மட்டுமே அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2024-25ல் 214 ஆகவும், 2023-24ல் 272 ஆகவும் இருந்தன. தற்போது, மிகவும் துல்லியமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணைகளை மேற்கொள்வதே இந்த சரிவுக்கு காரணம்.
அதேநேரம், நாடு முழுதும் நடத்தப்பட்ட சோதனைகள் 1,491ல் இருந்து 2,892 ஆக, அதாவது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 81,422 கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டில் முடக்கப்பட்ட 30,036 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 171 சதவீதம் அதிகம்.
பண மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு பணத்தை திரும்ப அளிப்பதிலும், அமலாக்கத் துறை நிர்ணயித்த இலக்கை விட இரு மடங்கு வெற்றி பெற்றுள்ளது.
நிதியாண்டின் தொடக்கத்தில் 15,000 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்துவது என இலக்கு வைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32,678 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதில், பி.ஏ.சி.எல்., எனும் மோசடி திட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 15,582 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தரவுகளின் பயன்பாடு காரணமாக, ஒரு வழக்கின் கால அளவு நான்கு ஆண்டுகளில் இருந்து 1.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan