Paristamil Navigation Paristamil advert login

ஓட்டு எண்ணும் அறைக்குள் போலீசார் நுழைவதற்கு தேர்தல் ஆணையம் தடை

ஓட்டு எண்ணும் அறைக்குள் போலீசார் நுழைவதற்கு தேர்தல் ஆணையம் தடை

2 வைகாசி 2026 சனி 14:20 | பார்வைகள் : 178


ஓட்டு எண்ணும் அறைக்குள் சீருடையுடன் அல்லது சீருடை இல்லாத போலீசாரை அனுமதிக்கக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அழைத்தால் மட்டுமே அவர்கள் உள்ளே வரலாம். இல்லையெனில், உள்ளே செல்ல அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. நாளை மறுதினம் (மே 4) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓட்டு எண்ணும் பணி அன்றைய தினம் காலை 8:00 துவங்கும். என்றாலும் கூட, இப்பணியில் ஈடுபடுவோர், காலை 5:00 மணிக்கே ஓட்டு எண்ணும் இடத்துக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணும் அறைக்குள் ஓட்டு எண்ணும் பணிக்கு நியமித்த மேற்பார்வையாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், தேர்தல் பணியில் தொடர்பு உடையவர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் அனுமதிக்க வேண்டும்.

சீருடையுடன் மற்றும் சீருடை இல்லாத போலீசார் அனுமதிக்கக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அழைத்தால் மட்டுமே போலீசார் ஓட்டு எண்ணும் அறைக்குள் வரலாம். இல்லையெனில், உள்ளே செல்ல அனுமதியில்லை.

சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரங்களை கரும் பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வெற்றிக்கான இடைவெளி, பெறப்பட்ட தபால் ஓட்டுகள் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணலாம். ஓட்டு எண்ணிக்கை கடைசி சுற்று முடிந்ததும் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஓட்டுச்சாவடிகளின் விவி பேட் இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவற்றில் உள்ள பேப்பர் சிலிப்களை சரிபார்க்க வேண்டும் என ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரகசிய முத்திரையை  ஆணையத்துக்கு அனுப்பணும்

தேர்தல் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கைக்கு பின், ஓட்டுப்பதிவு இயந்திரம், விவி பேட் இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீலிட வேண்டும். கன்ட்ரோல் யூனிட்டில் ரிசல்ட் பகுதியை வெளிப்புறமாக மூடி, முத்திரையிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் முத்திரையோடு, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய ரகசிய முத்திரையை இட வேண்டும்.

வாக்காளர் பதிவேடு, வாக்காளர் துண்டு சீட்டு, பயன்படுத்தாத தபால் ஓட்டுச்சீட்டு கையிருப்பு, பயன்படுத்திய தபால் ஓட்டுச்சீட்டு, ஓட்டுச்சாவடியில் பயன்படுத்திய குறியிட்ட வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட தேர்தல் ஆவணங்கள் கொண்ட உறையை மூடி, இந்திய தேர்தல் ஆணையத்தின் ரகசிய முத்திரையை இட வேண்டும். தேர்தல் ஆவணங்கள் அனைத்தையும் உலோக ட்ரெங்க் பெட்டியில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பூட்டுகள் பூட்டி சீலிட வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கான சாவிகளை ஒன்றை தன்னிடம் வைத்திருக்க வேண்டும்; மற்றொன்றை கருவூலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் ஆவணங்கள் உள்ள அறை சீலிடப்படுவதை கண்காணிக்க மூத்த அலுவலர் நியமிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் விரும்பினால் அவர்களது முத்திரையையும் சீலிட பயன்படுத்தலாம். அனைத்து பைகளிலும் சீலிட்ட பின், ரகசிய முத்திரையை தனியாக ஒரு பையில் வைக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிவுற்ற 24 மணி நேரத்துக்குள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.