Paristamil Navigation Paristamil advert login

மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்

மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்

1 வைகாசி 2026 வெள்ளி 15:49 | பார்வைகள் : 168


மியன்மாரின் மக்களாட்சித் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான 80 வயதுடைய ஆங் சான் சூகி, இராணுவச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மியன்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகி, நேபிடாவ் நகரில் உள்ள இராணுவச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூகியின் எஞ்சிய சிறைத்தண்டனையை அவர் ஒரு குறிப்பிட்ட இல்லத்தில் தங்கியிருந்து கழிக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீருடை அணிந்த இரு அதிகாரிகளுடன் சூகி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஆங் சான் சூகியின் மகன் கிம் ஆரிஸ் கடும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரச ஊடகத்தில் வெளியான புகைப்படம் 2022-இல் எடுக்கப்பட்டது எனவும், அது தற்போதைய நிலையை விளக்கவில்லை எனவும் அவர் பிபிசி-க்குத் தெரிவித்துள்ளார்.

தனது தாயார் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் தன்னிடம் இல்லை எனவும், அவருடன் பேச அனுமதிக்கும் வரை இந்தச் செய்திகளை நம்பப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.செய்தி சேவை

2021 புரட்சிக்கு பின்னர் சூகிக்கு விதிக்கப்பட்ட 33 ஆண்டு காலச் சிறைத்தண்டனை பலமுறை குறைக்கப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவ ஆட்சி மீதான சர்வதேசத் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், மியன்மார் ஒரு முறையான அரசாங்கம் என்பதைக் காட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சூகியுடன் சிறையில் இருந்த அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னல், மியன்மார் சிறைகள் மிகவும் பழமையான முறையில், அடிப்படை வசதிகளின்றி மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆங் சான் சூகியின் சட்டதரணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரைச் சந்திக்கவில்லை என்பதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லாமல் உள்ளனர். 80 வயதான சூகியின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில், இந்த வீட்டுக்காவல் மாற்றம் அவரது முழுமையான விடுதலையை நோக்கிய நகர்வா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.