Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும் கனடியர்கள்...!

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும்  கனடியர்கள்...!

11 பங்குனி 2026 புதன் 13:01 | பார்வைகள் : 1027


மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4 முதல் மார்ச் 8 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவர்கள் நேரடி மற்றும் மாற்று விமானப் பாதைகள் ஊடாக கனடாவை வந்தடைந்துள்ளனர்.

வர்த்தக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு ஊக்குவிக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் விசேட விமானங்கள் (Charter flights) மற்றும் பேருந்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

சுமார் 871 பேர் துருக்கி போன்ற பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்குச் சென்றுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உதவி கோரி வரும் அழைப்புகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கில் சுமார் 110,000 கனடியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வெளியேறுவதற்கு உதவி கோரியுள்ளனர்.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலுடன் தொடங்கிய இந்த வன்முறைச் சம்பவங்களில், இதுவரை கனடியர்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.