Paristamil Navigation Paristamil advert login

Strava பயன்பாட்டால் கசிந்த இராணுவ ரகசியம்- Charles-de-Gaulle கப்பலின் இருப்பிடம் வெளியானது!!

Strava பயன்பாட்டால் கசிந்த இராணுவ ரகசியம்- Charles-de-Gaulle கப்பலின் இருப்பிடம் வெளியானது!!

21 பங்குனி 2026 சனி 07:45 | பார்வைகள் : 844


மததிய தரைக்கடலில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் Charles-de-Gaulle தொடர்பான ரகசிய தகவல் எதிர்பாராத முறையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு இளம் கடற்படை அதிகாரி தனது ஓட்டப் பயிற்சியை பதிவு செய்ததன் மூலம், அந்த கப்பலின் இருப்பிடம் சைப்பிரஸ் தீவுக்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளை மீண்டும் முன்வைக்கிறது. இந்த தகவல் Le Monde வெளியிட்ட விசாரணையின் மூலம் வெளிவந்தது. 

Strava செயலியில், அந்த அதிகாரி 7 கிலோமீட்டருக்கு மேல் ஓடிய தனது பயிற்சியை பதிவு செய்திருந்தார். பொதுமக்களுக்கு திறந்திருந்த இந்த தகவல்கள், கப்பலின் துல்லியமான இருப்பிடத்தை கண்டறிய வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பும் அவர் இதேபோன்ற தகவல்களை பகிர்ந்திருந்ததாக அறியப்படுகிறது.

இதுகுறித்து பதிலளித்த பிரெஞ்சு இராணுவம், இந்த செயல் நிலவும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளது. மேலும், “டிஜிட்டல் பாதுகாப்பு ஒழுக்கம்” படையினருக்கு கட்டாயமான ஒன்றாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Strava செயலி மூலம் முன்பும் பல்வேறு இராணுவ தகவல்கள் வெளியான நிலையில், உலக தலைவர்களான டொனால்ட் டிரம்ப், இம்மானுவல் மக்ரோன்  மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரின் பாதுகாப்பு பணியாளர்களின் இருப்பிடங்களும் இதன் மூலம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.