ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிப்பதா? அமெரிக்க பரிந்துரையை நிராகரித்தது பா.ஜ.,
18 பங்குனி 2026 புதன் 13:22 | பார்வைகள் : 217
நம் நாட்டின் உளவு அமைப்பான, 'ரா' மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்க பரிந்துரைத்த அமெரிக்க அமைப்பின் அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.
யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், உலகம் முழுதும் உள்ள மதச் சுதந்திரத்தின் நிலையை கண்காணித்து, அமெரிக்க அரசிற்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்கும் சுதந்திரமான அமைப்பு. இது, ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் மத சுதந்திர நிலை குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுகிறது.
சமீபத்தில், இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மத சுதந்திரம் கடுமையாக மீறப்படும் நாடுகளின் பட்டியலில், நம் நாட்டை குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில், கடந்த ஆண்டு முஸ்லிம், கிறிஸ்துவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அவர்கள் மீது குறிப்பிட்ட கும்பல்கள் தாக்குதல்களை அரங்கேற்றின. ஆனால், தாக்குதல் நடத்தியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன' என, குறிப்பிட்டுள்ளது.
இதன் பின்னணியில், இந்தியாவின் உளவு அமைப்பான ரா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாக அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் சுட்டிக்காட்டியது. இதுதவிர மத சுதந்திரத்தை மீறும் செயல்களில் இந்த அமைப்புகளுக்கு பங்கு இருப்பதாக கூறி, 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' என்ற பட்டியலில் நம் நாட்டை தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இணைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதுடன், அவர்களின் சொத்துகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதேபோல், இந்தியாவில் மத சுதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தடை விதிக்கும்படியும் அமெரிக்க அரசுக்கு இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
எனினும், இந்த அறிக்கையை நம் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'இது, உள்நோக்கம் கொண்டது மற்றும் பாரபட்சமானது. இது, நம் நாட்டின் இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி. இந்தியா மீது பழிபோடுவதை விடுத்து, அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரிப்பு போன்ற தீவிர பிரச்னைகளில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்த வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்க அமைப்பின் இந்த அறிக்கையை, பா.ஜ.,வும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், எம்.பி.,யுமான சம்பித் பத்ரா நேற்று கூறுகையில், “இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை, நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது. எந்தவொரு வெளிநாட்டு ஆணையமும் நம் நாட்டிற்கு நிபந்தனைகளை விதிக்கவோ அல்லது அதன் நிறுவனங்களுக்கு எதிராகத் தடை விதிக்கப் பரிந்துரைக்கவோ முடியாது. ஆனால், இதை காங்., ஆதரித்துள்ளது. இது, நம் நாட்டை களங்கப்படுத்தும் முயற்சி,” என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan