Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு - பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு - பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

1 மாசி 2026 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 463



எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகப் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் கூறினார்.

தற்காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது சிரமமாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, முன்னைய பேருந்து கட்டணத் தேசிய கொள்கைக்கு அமைய, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது என்று தெரிவித்தார்.

எனினும், தற்போது அந்தத் தூரம் குறைவடைந்துள்ளதாகவும், இப்பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 முதல் 6 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன:

"இங்கு பெரியதொரு சிக்கல் உள்ளது. மிக விரைவில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்க நேரிடும். ஏனெனில், வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே பேருந்து கட்டண உயர்வு அவசியம் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. இலங்கையில் குறுகிய தூரப் பேருந்து சேவைகளே அதிகம் இயங்குகின்றன. இலங்கையில் 13,000 முதல் 14,000 வரையிலான பேருந்துகள் உள்ளன. இதில் சாதாரணமாக 6,000 முதல் 7,000 மேலதிக பேருந்துகள் உள்ளன. இப்போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது.

முன்பு பேருந்து கட்டணத் தேசிய கொள்கையில், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் ஓடக்கூடிய தூரம் 2.5 அல்லது 3 கி.மீ என்றே கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது அது மேலும் குறைந்து, 2 கி.மீ கூட ஓட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல்.

அரசாங்கம் வந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அரசாங்கம் என்ன செய்தது? அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு என்ன செய்தார்? அவர்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக மோசமான ஊழல்வாதிகள் என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறுகிறோம். பொதுப் போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் கட்டண உயர்வைக் கோருவோம். கடந்த காலம் முழுவதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஏனென்றால் பொதுப் போக்குவரத்து சேவை முற்றாகச் சீர்குலைந்துள்ளது. தனியார் பேருந்து சேவையை ஒழுங்குபடுத்துவது நாங்கள் அல்ல என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பேருந்து கட்டணம் குறித்து மீளாய்வு செய்யுமாறு நாங்கள் கோருகிறோம். ஏனெனில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. குறைந்தபட்சம் குறுகிய தூர சேவைகளுக்கு, ஆரம்பக் கட்டணத்தை 5 அல்லது 6 ரூபாவினால் அதிகரிக்க வேண்டியுள்ளது," என்று தெரிவித்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்