Paristamil Navigation Paristamil advert login

பிரேஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு - 64 பேர் பலி

பிரேஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு - 64 பேர் பலி

28 மாசி 2026 சனி 13:56 | பார்வைகள் : 257


பிரேஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளதுடன் காணாமல் போனோரை தேடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais) மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (27) இந்தத் சம்பவம் வெளியானது. இதில் ஜுயிஸ் டி ஃபோரா (Juiz de Fora) மற்றும் உபா (Uba) ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் தற்போதைய நிலைவரத்தின்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5ஆகவும் மேலும் 5,500-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மினாஸ் ஜெரைஸ், ரியோ மற்றும் சாவோ பாலோ ஆகிய மாநிலங்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு  வானிலை அவதான நிலையம் (Inmet) "மிகுந்த அபாய" எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மினாஸ் ஜெரைஸ் மாநிலத்திற்கு  பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார்.

பாதிக்கப்பட்ட நகரங்களின் மேயர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக மத்திய அரசு சுமார் 3.4 மில்லியன் ரியால் ($660,000) நிதியை ஒதுக்கியுள்ளது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே இத்தகைய தீவிர அனர்த்த நிலைமைகளுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.