யு டர்ன் அடித்தது டிட்வா புயல்; 9ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு
4 மார்கழி 2025 வியாழன் 11:59 | பார்வைகள் : 148
வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.
அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, 13; புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா, 12; சோழிங்கநல்லுார் சத்தியபாமா பல்கலை, மணலி புதுநகர், சென்னை வி.ஐ.டி., பல்கலை, திருக்கழுக்குன்றம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தொடர்ந்து, வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்த்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.
அதன்பின், 'யு டர்ன்' அடித்து, இது வந்த பாதையிலேயே தெற்கு, தென்மேற்கு நோக்கி நேற்று நகர துவங்கியது. நேற்று பகல் நிலவரப்படி, புதுச்சேரி நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan