Paristamil Navigation Paristamil advert login

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக பிரதமர் உறுதி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக பிரதமர் உறுதி

19 மார்கழி 2025 வெள்ளி 17:18 | பார்வைகள் : 163


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல்களைக் கூடிய விரைவில் நடத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் விதிகளால் தடைப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (2025 டிசம்பர் 19) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரித்து, அதனைப் பொதுமக்களிடம் சமர்ப்பித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர், தேவையான மாற்றங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். தற்போது புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அதன் அடிப்படை எண்ணக்கருப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இயலாது. இந்த முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான குறிப்பிட்ட கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 3(ஆ) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தல் தொகுதிகள் மற்றும் எல்லைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும்.

மேற்படி சட்ட விதிகளின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாமையே மாகாண சபைத் தேர்தலை இதுவரை நடத்த முடியாமல் போனதற்கான காரணமாகும். எனவே, எல்லை நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், இச்செயற்பாடுகளின் இறுதியில் தேர்தலை நடத்துவதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அரச குற்றவியல் வழக்குத் தொடரகம்  ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்