Paristamil Navigation Paristamil advert login

வி.ஐ.பி., தொகுதியான காரைக்குடியில் போட்டியிட முந்தும் த.வெ.க., நிர்வாகி

வி.ஐ.பி., தொகுதியான காரைக்குடியில் போட்டியிட முந்தும் த.வெ.க., நிர்வாகி

17 மார்கழி 2025 புதன் 12:56 | பார்வைகள் : 172


வி.ஐ.பி., அந்தஸ்து பெற்ற காரைக்குடி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணியில் த.வெ.க., தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளில், வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றது காரைக்குடி. 2026 சட்டசபை தேர்தலில் இங்கு போட்டியிட அனைத்து கட்சியினரும் திட்டமிட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் காரைக்குடி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மாவட்ட தலைவர் பாண்டித்துரையும், முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரும் முயற்சிக்கின்றனர். அதேபோல அ.தி.மு.க.,வினரும் தலைமையிடம் மோதி வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் காங்., போட்டியிடும் என்பது ஊர்ஜிதம் ஆகிவிட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் காரைக்குடியில் நடந்த மாநாட்டில் மற்ற 3 தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான், காரைக்குடியில் அவரே போட்டியிட திட்டமிட்டு அத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பை 'சஸ்பென்ஸ்' ஆக வைத்துள்ளார் என்ற கருத்து நிலவுகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க களத்தில் இறங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் காரைக்குடி அதிக முக்கியத்துவம் கொண்டதாக கவனிக்கப்படுகிறது. புதிதாக கட்சி துவக்கிய த.வெ.க., தலைவர் விஜய், மாநாடு மூலம் தொண்டர்களை சந்தித்து தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

இந்த மாநாடு நடக்கும் இடங்களில் எல்லாம் மருத்துவ குழுவை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார் த.வெ.க.,வின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு. இதனால் கட்சித் தலைமையிடம் நம்பிக்கைக்குரிய நபராக மாறியுள்ளதால், காரைக்குடியில் போட்டியிட தனக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

இதன் வெளிப்பாடாக கண்ணங்குடி ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து த.வெ.க.,வில் இணைந்து ஒன்றிய செயலாளரான அசோகன், கட்சிக் கூட்டத்தில் காரைக்குடி தொகுதியில் டாக்டர் பிரபு தான் போட்டியிடுவார். அவருக்கு ஆதரவு தாருங்கள் எனப் பேசினார். கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே காரைக்குடி தொகுதியில் வேட்பாளரை அறிவித்து அக்கட்சியினர் தேர்தல் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

கட்சி தலைமைக்கு விபரம் மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு கூறியதாவது: மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அசோகன், த.வெ.க., ஒன்றிய செயலாளரானார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டம் கண்ணங்குடியில் நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். என்னையும் அறியாமல், அவர் என்னை வேட்பாளர் என கட்சியினரிடம் தெரிவித்து விட்டார். கட்சித் தலைவர் விஜய் அறிவிக்காமல் நாம் சொல்லக்கூடாது என அவரிடம் தெரிவித்துவிட்டு, தலைமைக்கும் விபரத்தை சொல்லிவிட்டேன் என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்