Paristamil Navigation Paristamil advert login

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

16 மார்கழி 2025 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 191


நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருக பெருமான் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். ஆனால் அதை நிறைவேற்றாத தமிழக அரசு, மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக, தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு - ஹிந்து அமைப்புகள் இடையே மோதல் வெடித்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சூழலில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது:

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட ஆளும் திமுக ஆதரவு கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்கள், சில வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, பொது இடங்களில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்களை நடத்தினர். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசும், போலீசாரும் தவறிவிட்டனர்.

இது போன்ற செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்