Paristamil Navigation Paristamil advert login

சைபர் கிரைம் மோசடியால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,000 கோடி!

சைபர் கிரைம் மோசடியால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,000 கோடி!

15 மார்கழி 2025 திங்கள் 12:24 | பார்வைகள் : 154


நாடு முழுதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து, சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை, சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்த நான்கு பேர், 58 நிறுவனங்கள் மீது, சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, ஆன்லைனில் சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீடுக்கு அதிக லாபம் உட்பட பல போலியான திட்டங்களை நம்பி மக்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சைபர் கிரைம் மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிந்தனர்.

மையப்புள்ளி


'ஆப்பரேஷன் சக்ரா - வி' என்ற பெயரில் நடவடிக்கையை துவங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள், துவக்கத்தில், தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்தனர். ஒரு கட்டத்தில், அனைத்து வழக்குகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். அதாவது, மொபைல் போன் செயலி, பணப் பரிவர்த்தனை முறை, பணம் செலுத்தும் முறை ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தன.

விசாரணையில், மோசடி செய்தவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்கவும், சட்ட அமலாக்க அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும், கூகுள் விளம்பரங்கள், கிளவுட் சர்வர்கள், பின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப தளங்கள், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்துக்கான வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியது தெரிய வந்தது.

மேலும், போலி இயக்குநர்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான வணிக நோக்கங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 111 போலி நிறுவனங்கள் இந்த மோசடிக்கு மையப்புள்ளியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் மூலம் வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

நுாற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதில் ஒரேயொரு வங்கிக் கணக்கில் மட்டும், குறுகிய காலத்தில் 152 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.

குற்ற ஆவணங்கள்


இது தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில், 27 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் தொடர்புடைய இரண்டு இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் வெளிநாட்டில் பயன் பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது, சர்வதேச நெட்வொர்க்கை உறுதிப்படுத்துகிறது.

இது தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த சோ யி, ஹுவான் லியு, வெய்ஜியன் லியு, குவான்ஹுவா வாங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள், 2020 முதல் இந்தியாவில் போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட மூன்று பேர் அக்டோபரில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் , சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், வெளிநாடுகளைச் சேர்ந்த நால்வர், 58 நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்