Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல்

பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல்

13 மார்கழி 2025 சனி 14:39 | பார்வைகள் : 1216


பங்களாதேஷில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 

இதனால் ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை அடுத்து அவரை நாடு கடத்தவும் இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்தது. 

பங்களாதேஷின் கோரிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின்னர், பங்களாதேஷின் 13-வது தேசிய பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையாளர் (CEC) நசிருதீன் வெளியிட்டார். சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் போலியான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். 

பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் ஜூலை சாசன (July Charter) வாக்குப்பதிவு ஆகிய இரண்டும் பெப்ரவரி 12 ஆம் திகதி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் செயல்முறைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்ட நிலையில் முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தின் ஓராண்டுக்கு பிறகு தற்போது வங்காள தேசத்தில் முறைப்படி தேர்தல் நடைபெறவுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்