Paristamil Navigation Paristamil advert login

கொரோனாவில் பலியான தனியார் டாக்டர்களுக்கும் இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொரோனாவில் பலியான தனியார் டாக்டர்களுக்கும் இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

12 மார்கழி 2025 வெள்ளி 08:27 | பார்வைகள் : 102


கொரோனா காலத்தில் உயிரிழந்த தனியார் மருத்துவமனை டாக்டர்களும் பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற தகுதியானவர்கள்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண்' காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா டாக்டரான சுரக்கதே என்பவர், கடந்த 2020 ஜூன் மாதம், மருத்துவ பணியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவருக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் தனியார் மருத்துவர் எனக்கூறி நவிமும்பை மாநகராட்சி கோரிக்கையை நிராகரித்தது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் டாக்டரின் மனைவி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, 2021 மார்ச் 9ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் நரசிம்மா, ஆர்.மகாதேவன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து, 'கொரோனா காலத்தில் உயிரிழந்த தனியார் டாக்டர்களும் பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற தகுதியானவர்கள்' என உத்தரவிட்டனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பை நாம் வழங்கவில்லை என்றால், இந்த சமூகம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது' என, நீதிபதி நரசிம்மா காட்டமாக கூறியிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்