Paristamil Navigation Paristamil advert login

எந்த சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது: எம்.பி.,க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

எந்த சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது: எம்.பி.,க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

10 மார்கழி 2025 புதன் 09:15 | பார்வைகள் : 1619


எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில், நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உட்பட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றது முதல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கியே அரசின் பயணம் உள்ளது. நாடு இப்போது, 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாக கொண்டது அல்ல; முற்றிலும் குடிமக்களை மையமாக கொண்டுள்ளன. மக்களின் முழு திறனும் வளர்வதற்கு, அவர்களின் அன்றாட தடைகளை நீக்குவதே இதன் குறிக்கோள். எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும்.

அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த எக்ஸ்பிரஸ், மக்களின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அவர்களின் தினசரி கஷ்டங்களை நீக்க வேண்டும். இதற்கு, எம்.பி.,க்களின் பங்கு மிகவும் அவசியம்.

விதிமுறைகள், ஆவணங்கள் என்ற பெயரில், 30 - 40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற காகித வேலைகளின் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது. மீண்டும் மீண்டும் சுய விபரம் குறித்து தரவு சமர்ப்பிக்கும் முறையை அகற்ற வேண்டும்.

இது பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. மக்களின் வீட்டு வாசலில் அரசின் சேவைகளை வழங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்