மோந்தா புயல் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும்
28 ஐப்பசி 2025 செவ்வாய் 06:33 | பார்வைகள் : 263
மோந்தா புயல் எதிரொலியாக சென்னை- விசாகப்பட்டினம் இடையே இன்று (அக் 28) 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. மோந்தா புயல் இன்று இரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. தற்போது, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 420 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 570 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, இன்று காலை தீவிர புயலாக வலுவ டைந்து, மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90 -100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
எச்சரிக்கை கூண்டு
ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ள நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழகம், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.ஆந்திராவில் புயலால் பாதிக்கப்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
9 விமானங்கள் ரத்து
சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்து பின்னர் ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்களும் விசாகப்பட்டினத்தில் இன்று விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
உஷார் நிலையில் அதிகாரிகள்!
புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ள நிலையில் அதிகாரிகள் பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். அதேநேரத்தில், கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் வீட்டிற்குள்ளே இருக்கவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, ஒடிஷாவுக்கு ரெட் அலெர்ட்
மோந்தா புயல் காரணமாக, ஆந்திராவில் காக்கி நாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உட்பட 14 மாவட்டங்களில், இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரகாசம், கர்னுால், திருப்பதி உட்பட எட்டு மாவட்டங்களில், மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அனந்தபுரமு, ஸ்ரீசத்யசாய், அன்னமையா, சித்துார் ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதே போன்று ஒடிஷாவிலும், பெரும் பாலான கடலோர மாவட்டங்களிலும், அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan