நெல் கொள்முதலில் சிக்கலோ சிக்கல்: மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்கள் : நயினார் நாகேந்திரன்
27 ஐப்பசி 2025 திங்கள் 06:58 | பார்வைகள் : 151
பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் பா.ஜ., சார்பில், மக்கள் சந்திப்பு மற்றும் கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின் அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று பெருமை பேசிக் கொள்கிறார். கடந்த ஜூன் மாதமே குறுவை சாகுபடி தொடங்கி விட்டது. மொத்தம் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவல் முதல்வருக்கு நன்கு தெரியும். ஆனாலும், நெல் கொள்முதலை பிரச்னையின்றி செய்ய, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடவில்லை.
நெல் அறுவடையானதும், அதை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து விளைவிக்கப்பட்ட அனைத்தும் வீணாகி விட்டது.
கேட்டால், வாங்கும் நெல்லை கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க, போதுமான கிடங்கு இல்லை என்கிறார்கள். இதெல்லாவற்றையும் கடந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால், மூட்டைக்கு 42 ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது.
இதற்கான முழு காரணமும் தி.மு.க., அரசுதான். பயிர் பாதித்த இடங்களுக்கு அதிகாரிகள் யாரும் இன்றுவரை செல்லவில்லை.
பெயருக்கு அங்கு சென்ற துணை முதல்வர், பாதிப்பை பார்க்கவில்லை; வந்ததாக கணக்குக்காட்ட படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்.
கொள்முதல் செய்யாத நெல் பாதிப்புக்குள்ளான விஷயத்தில், அமைச்சர்கள் சாக்கு போக்கு சொல்கிறேன் என்று, மாறி மாறி பேசி வருகின்றனர்.
கரூர் உயிர் பலியில் நடிகர் விஜய் மீது குற்றம் சொல்ல முடியாது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan