Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி

அமெரிக்காவில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி

22 ஐப்பசி 2025 புதன் 11:11 | பார்வைகள் : 178


அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் தற்போது எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.

புதிய விதிகள் படி, எச் - 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்ச ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும். இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டணம் யாருக்கு பொருந்தும் என தெளிவாக விளக்கப்படாத காரணத்தினால், குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமைத்துறை சார்பில் கட்டண உயர்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,எச்1பி விசா இல்லாமல், அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் செப்,., 21ம் தேதி அந்நாட்டு நேரப்படி 12:01க்கு பிறகு தாக்கல் செய்யும் விசாவுக்கு இக்கட்டணம் பொருந்தும். அதேபோல், செப்.,21ம் தேதி 12:01க்கு பிறகு தூதரக அறிவிப்பு அல்லது விமானத்திற்கு முந்தைய ஆய்வு ஆகியவற்றுக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் இது பொருந்தும்.

விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

எப்1 மாணவர் விசாவில் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் , எல் -1 விசாவில் பணியாற்றும் ஊழியர்கள், அமெரிக்காவில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

( எல்1 விசா மூலம் வெளிநாட்டில் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்கு சர்வதேச நிறுவனங்கள் மாற்றிக் கொள்வதற்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசா ஆகும்.

எப்-1 விசா என்பது அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முழு நேரம் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசா ஆகும்)

* ஏற்கனவே எச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விலக்கு

* விசாக்களின் தன்மையை மாற்றக்கோரி மனு செய்தவர்களுக்கும், தங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டி அமெரிக்காவுக்குள் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்

* செப்.,21க்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுககளுக்கு விலக்களிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவார்கள்.

* அரிதாக, நாட்டின் நலனுக்காக ஒரு ஊழியர் பணியாற்றுகிறார். அவருக்கு மாற்றாக அமெரிக்காவில் வேறு யாரும் இல்லை என வேலை வழங்கும் நிறுவனம் கருதினால், இக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக்கோரலாம். இதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்