Paristamil Navigation Paristamil advert login

சாதகமானவரை டி.ஜி.பி.,யாக்கி தேர்தலை சந்திக்க திட்டம்: தி.மு.க., மீது பழனிசாமி புகார்

சாதகமானவரை டி.ஜி.பி.,யாக்கி தேர்தலை சந்திக்க திட்டம்: தி.மு.க., மீது பழனிசாமி புகார்

11 கார்த்திகை 2025 செவ்வாய் 11:29 | பார்வைகள் : 103


தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிப்பதில் ஏன் இவ்வளவு குளறுபடி? இந்த விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும், தி.மு.க., அரசு விடாப்பிடியாக இருக்கிறது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., அரசுக்கு வேண்டப்பட்டவரை டி.ஜி.பி.,யாக்கி, அவர் வாயிலாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளவே, இத்தனை கூத்துக்களையும் அரங்கேற்றுகின்றனர். டி.ஜி.பி., ஓய்வு பெற 3 மாதங்களுக்கு முன்பே, தகுதியானவர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது நடைமுறை.

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மட்டுமல்ல, யாரையுமே மதிக்காமல் தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது.

எஸ்.ஐ.ஆர்., என்றாலே, தி.மு.க.,வினர் அலறுகின்றனர். போலி வாக்காளர்களை முழுதுமாக நீக்கி, நியாயமான தேர்தலை நடத்த, எஸ்.ஐ.ஆர்., அவசியம். தமிழகத்தில், அந்தளவுக்கு வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது, அங்கு குடிசை மாற்று வாரிய கட்டடத்தை இடித்து விட்டனர். அந்த கட்டடத்தில் இருந்தோரை, அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. இன்று வரை, அந்த கட்டடத்தில் வசித்தோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

இதை சரி செய்யத்தான், வாக்காளர் திருத்தப்பதிவு நடக்கிறது. ஆனால், அதை முறையாக நடக்க விடாமல் தடுக்க, தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதை முறியடிக்கவே, அந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க., தரப்பில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்