Paristamil Navigation Paristamil advert login

பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை

பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை

11 கார்த்திகை 2025 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 104


பினாமிகள் பெயரில், பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகள் அறக்கட்டளைகள் துவங்கி, வெளிநாடுகளில் இருந்து நிதி வசூலித்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:


தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், ரகசிய செயற்பாட்டாளர்கள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டி உள்ளனர்.

சதி திட்டம் தீட்டவும், பயங்கரவாத செயலுக்கும் நிதி திரட்டியது தெரியவந்தது.

பி.எப்.ஐ.,யின் அரசியல் அமைப்பு தான், எஸ்.டி.பி.ஐ., என்பதும், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்த ரகசிய டைரியையும், பறிமுதல் செய்துள்ளோம்.

எஸ்.டி.பி.ஐ., அமைப்புக்கு வேட்பாளர் தேர்வு, பொது நிகழ்ச்சிகளை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கைக்கு, பி.எப்.ஐ., தான் பணம் கொடுத்து உள்ளது. இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து, சமூக சேவைக்கு என, பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பி.எப்.ஐ., சொத்துக்கள் பெரும்பாலும் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், சிமி என்ற ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில், உடற்பயிற்சி கூடங்கள் என்ற பெயரில் ஆயுத பயிற்சியும், தாக்குதல் நடத்துவற்கான பயிற்சிகளும் அளித்துள்ளனர்.

இவர்கள், கேரள மாநிலத்தில் நடத்தி வந்த எட்டு அறக்கட்டளைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன; 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.

தொடர் விசாரணையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள், தமிழகத்திலும் பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி, பயங்கரவாத செயலுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, ஏற்கனவே கைதான பி.எப்.ஐ., நிர்வாகிகள், 28 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.

இலவச கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தருவதுபோல முகாம்கள் நடத்தி, அதை ஆவணப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி, பணம் பெற்றுஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்