Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்

டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்

11 கார்த்திகை 2025 செவ்வாய் 07:25 | பார்வைகள் : 1720


தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத் துறை எச்சரித்திருந்தது.

அதே வேளையில் கடந்த அக்., 19ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது.

அம்மோனியம் நைட்ரேட்


அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஜம்மு - காஷ்மீர் போலீசார் ஆராய்ந்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறி இருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அந்த போஸ்டர்களை ஒட்டியவர் டாக்டர் அடில் அகமது என்பது தெரிந்தது. உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற அவரை, பின் தொடர்ந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஷஹாரன்பூரில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், தாவுஜ் கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற மூலப்பொருள், 350 கிலோ வரை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின.

டாக்டர் ஷகீலுக்கு கார் கொடுத்து உதவிய பெண் டாக்டர் ஷகீன் என்பவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று டாக்டர்கள் உள்பட எட்டு பேர் கைதாகியுள்ளனர்.

விசாரணை


இந்த சதித் திட்டத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாத நெட்வொர்க்கில் டாக்டர்களும் சேர்ந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், டில்லியில் நேற்று மாலை மற்றொரு பயங்கர தாக்குதல் அரங்கேறியது. டில்லி செங்கோட்டை அருகே, மாலை 6:52 மணிக்கு, சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ - ரிக் ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கார் வெடித்தது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது:

செங்கோட்டை அருகே மாலை 6:52 மணி அளவில், சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்ற, 'ஹூண்டாய் ஐ20' கார் வெடித்தது. அதில் சில பயணியரும் இருந்தனர். காருக்கு அருகே நின்றிருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. டில்லி போலீஸ், தடயவியல் குழு, என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி., ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

ஆறுதல்


முதற்கட்ட விசாரணையில், ஹரியானா பதிவு எண் கொண்ட அந்த கார் நதீம் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு அவ்வப்போது விவரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின், பாதுகாப்பு நிலவரம் குறித்து டில்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை கேட்டறிந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்