Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., பொதுச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தும் டி.ஆர்.பாலு - ஆ.ராஜா

தி.மு.க., பொதுச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தும் டி.ஆர்.பாலு - ஆ.ராஜா

10 கார்த்திகை 2025 திங்கள் 12:26 | பார்வைகள் : 100


தி.மு.க.,வின் உயர்மட்ட பதவிகளில் ஒன்றான பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் துரைமுருகனுக்கு ஓய்வு அளித்து விட்டு, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் முடிவில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டு வருகிறார். குறிப்பாக விஜயின் த.வெ.க., வருகைக்கு பின் தி.மு.க.,வின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்களை அமைச்சர்களோ, மண்டல பொறுப்பாளர்களோ சரிசெய்ய வேண்டும் என கண்டிப்பு காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 5 ஆக இருந்து துணைப் பொதுச் செயலாளர் பதவி 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன், கட்சி பொறுப்பை இழந்து அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடார், முக்குலத்தோர், வன்னியர், கொங்கு வேளாளர் கவுண்டர், ஆதிதிராவிடர் சமுதாயம் என அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளது.

யாருக்கு வாய்ப்பு


கட்சியின் முக்கிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் துரைமுருகன் வயது முதிர்வு காரணமாக 'ஆக்டிவ்' ஆக செயல்பட முடியவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை சரிக்கட்டும் வகையில், அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பி.,க்கு வேலுார் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துரைமுருகன் சமாதானம் ஆகியுள்ளார்.


இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு பொருளாளர் டி.ஆர்., பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா இருவரில் யாருக்கு வழங்குவது என முடிவெடுக்க முடியாமல் தலைமை திணறி வருகிறது. மூத்த தலைவர்கள் பலர் டி.ஆர்.பாலுவுக்கும், மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளில் பலர் ஆ.ராஜாவுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனராம்.

அதேநேரம் சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுச் செயலாளர் தேர்வில் சொதப்பல் ஏற்பட்டால் அது கட்சி கட்டமைப்பையே பாதிக்கும் என்பதால் தலைமை நிதானமாக முடிவு செய்கிறது. இருப்பினும் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் மனதில் யார்


தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகள்தான் முக்கியமானவை. பொதுச் செயலாளர் பதவியில் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அன்பழகன் இருந்துள்ளனர். தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் இருந்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஆழமானதாக இருந்தது. முக்கிய முடிவுகளை அன்பழகனுடன் ஆலோசித்துதான் கருணாநிதி எடுத்தார்.

அந்த இணக்கம் ஸ்டாலின் - துரைமுருகனிடம் இல்லை. தன்னை எப்போதும் அண்ணா காலத்து சீனியர் என துரைமுருகன் நினைப்பது உண்டு. அப்பாவுடன் இருந்த ஆழமான நட்பால் துரைமுருகனை எப்போதும் ஸ்டாலின் 'அட்ஜெஸ்ட்' செய்து செல்கிறார். பல நேரங்களில் துரைமுருகன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும். சிலநேரம் சாமர்த்தியமாக இருக்கும். இருப்பினும் வயது காரணமாக பொதுச் செயலாளரை மாற்ற வேண்டிய கட்டாயம் தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

தலைமை பதவியில் மாற்றம் கொண்டுவரும்போது அது கட்சியின் கீழ் மட்டம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே புதிய பொதுச் செயலாளர் பதவி விஷயத்தில் முதல்வர் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அந்த இடத்தில் டி.ஆர்., பாலு நியமிக்கப்பட்டால் பொருளாளர் பதவி சீனியரான ஏ.வ.வேலுவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆ.ராஜாவும் பரிசீலனையில் உள்ளார். இவ்விஷயத்தில் துணைமுதல்வர் உதயநிதி, மூத்த நிர்வாகிகள் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து, விரைவில் முடிவு எடுக்க உள்ளார் என்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்