Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் கூடுமிடங்களில் நாய்கள் வராமல்...வேலி போடுங்கள் ! உச்சநீதிமன்றம்

ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் கூடுமிடங்களில் நாய்கள் வராமல்...வேலி போடுங்கள் ! உச்சநீதிமன்றம்

8 கார்த்திகை 2025 சனி 11:39 | பார்வைகள் : 606


கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், அப்பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்தி, காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்களை சுற்றி வேலி அமைக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்றவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைநகர் டில்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்தும்படி, ஆகஸ்ட் துவக்கத்தில் உத்தரவும் பிறப்பித்தது.

பிரமாண பத்திரம்


இதற்கு எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை நாடு முழுதும் விரிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வழக்கில் சேர்த்தது.

தெரு நாய்கள் தொல்லை மற்றும் அவற்றை கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர மற்ற மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததால் கடும் கோபமடைந்தனர்.

மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர, தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலர்கள், நவம்பர் 3ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்; இதில், யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்றும் கறாராக கூறினர்.

இதன்படி, கடந்த 3ம் தேதி, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் உட்பட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அனைத்து பிரமாண பத்திரங்களையும் தொகுத்து, ஒரே கோப்பாக தரும்படி உத்தரவிட்டது.

பாதிக்கப்படும் பகுதிகள்


இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா இடம் பெற்ற அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெரு நாய்கள் தொல்லையும், அவற்றால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் கருதி, சில உத்தரவுகளை பிறப்பிக்க முடிவு செய்து உள்ளோம். அதாவது:

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அந்தந்த உள்ளூர் அல்லது நகராட்சி அதிகாரிகள் மூலம், தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை இரு வாரங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், வளாகத்திற்குள் தெரு நாய்கள் நுழைவதை தடுக்கும் வகையில், பெரிய சுற்றுச்சுவர்கள், வேலிகள் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பணிகளை எட்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்.

* பொதுமக்கள் கூடும் வளாகங்கள் துாய்மையாக இருப்பதை உறுதி செய்வதுடன், தெரு

நாய்கள் நுழையாமல் இருப்பதை கண்காணிக்க, ஒரு சிறப்பு அதிகாரியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். அவர், அது பற்றிய தகவல்களை அதிகார வரம்புக்கு உட்பட்ட மாநகராட்சிக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த பகுதிகளில் தெரு நாய்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பொதுமக்கள் கூடும் பகுதிகளில் காணப்படும், ஒவ்வொரு தெரு நாயையும், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளின்படி கருத்தடை செய்வதுடன், தடுப்பூசியும் போட்ட பின், காப்பகத்தில் உடனடியாக அடைக்க வேண்டும். இது, சம்பந்தப்பட்ட உள்ளூர் அமைப்பினரின் பொறுப்பு. தெரு நாய்களை பிடித்த அதே பகுதியில் மீண்டும் விடக்கூடாது. அப்படி செய்தால், அது ஒட்டுமொத்த நோக்கத்தையே தோல்வி அடையச் செய்யும்.

* மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவு சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைப்பதை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றவை உறுதி செய்ய வேண்டும்.

* பிடிக்கப்படும் கால்நடைகளை கொட்டகைகளில் அடைத்து வைத்து, உணவு, தண்ணீர் மற்றும் கால்நடை மருத்துவ பராமரிப்பு வழங்க வேண்டும். அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உதவி எண்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், கால்நடைகள் குறித்து பயணியர் புகார் அளிக்க முடியும். இந்த புகார்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்தாண்டு ஜன., 13க்கு ஒத்தி வைத்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்