வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக வழக்கு ! ஸ்டாலின்
                    4 கார்த்திகை 2025 செவ்வாய் 04:02 | பார்வைகள் : 147
மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் செயல் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்' என, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவேற்பு
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன.இச்சூழலில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., - தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.நீ.ம., முஸ்லிம் லீக், கொ.ம.தே.க., த.வா.க., ம.ம.க., - எஸ்.டி.பி.ஐ., உட்பட பல கட்சிகள் பங்கேற்றன.
வழக்கு நிலுவை
அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சி களுக்கு, தி.மு.க., சார்பில் அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆனால், அழைப்பு விடுத்தும், த.வெ.க., நாம் தமிழர், அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட 20 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
* பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில், இறுதி தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாதது.
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் உள்ள காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை போன்றவை இருக்கின்றன. இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, தங்களது ஓட்டுரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.
* உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். எனவே, திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வேண்டும்.
* உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்கு பின், எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில், திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இந்த கருத்துகளை ஏற்கவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்கள் பேசியது என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக குடியுரிமை சான்றிதழ் கேட்டால், யாராலும் கொடுக்க முடியாது. இந்தப் பணியை ஒரு மாதத்தில் முடிக்கும்படி கூறியுள்ளனர்; அதற்கு சாத்தியமில்லை. இது, பருவ மழை காலம்; அலுவலர்களால் இதை செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் செய்வது மோசடியான நடவடிக்கை. குறுக்கு வழியில் வெற்றி பெற, பா.ஜ., முயற்சி செய்கிறது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆறரை லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களின் பெயர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும், சென்னையில் மட்டும் பீஹாரைச் சேர்ந்த மூன்றரை லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் வாக்காளர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வி.சி., தலைவர் திருமாவளவன்: ஓட்டுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அல்ல; குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தையே அவர்கள் கேட்கின்றனர். மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, தேசிய குடியுரிமை பதிவேடு எனும் குடியுரிமை பதிவேட்டை உருவாக்கவே, இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியை செய்கின்றனர்.
ம.நீ.ம., தலைவர் கமல்: மக்களாட்சியின் அடித்தளமே ஓட்டுரிமை தான். தகுதியுள்ள ஒருவரின் பெயர் கூட, வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஏன் இவ்வளவு அவசரமாக செய்யப்படுகிறது? இந்த அவசரத்தால், 65 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் ஓட்டுரிமையை இழந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: இந்த திருத்தம் எப்படி மக்களின் உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: தமிழக சட்டசபை தேர்தல் கூடி வரும் நிலையில், அவசர கதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தேவையில்லாத ஒன்று. சட்டசபை தேர்தலுக்கு பின், நடுநிலையோடு நடத்தலாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
















Coupons
Annuaire
Scan