வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்

18 ஐப்பசி 2025 சனி 07:36 | பார்வைகள் : 551
வட கொரியாவில் அரசியல் எதிரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என 65,000 பேர்கள் சிறைகளில் கொடூரமான தண்டனைக்கு உட்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில் பாதுகாப்பு மிகுந்த நான்கு சிறைகளில் தற்போது கடும் சித்திரவதை, பட்டினி, உழைப்பு என அந்த 65,000 பேர்களும் துயரமனுபவித்து வருகின்றனர்.
வட கொரியாவில் முகாம் 14, 16, 18 மற்றும் முகாம் 25ல் இந்த 65,000 பேர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் அனைவரும் கட்டாய உழைப்பு, பட்டினி மற்றும் மிக மோசமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நான்கு கொடூர முகாம்களும் செயல்படுவதாக வட கொரியா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை. இருப்பினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே அந்த முகாம்கள் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கைதிகளின் வாக்குமூலம், விரிவான செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவைகளால் இந்தச் சிறைச்சாலையின் இருப்பு மற்றும் அங்கு நிகழும் கொடூரமான நடைமுறைகள், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Kwanliso என அறியப்படும் இந்த முகாம்களில் கிம் ஜோங் அரசுக்கு எதிரானவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களின் சிறார்கள் கூட வாழ்நாள் முழுவதும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 1965ல் Kaechon பகுதியில் முகாம் 14 நிறுவப்பட்டது.
கிம்மின் உறவினர் Jang Song-thaek என்பவர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதை அடுத்து, 2013ல் இந்த முகாம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் பலர் இந்த முகாமில் சிறை வைக்கப்பட்டனர். Punggye-ri அணு நிலையம் அருகே முகாம் 16 செயல்படுகிறது.
வட கொரியாவின் ஆயுத உற்பத்திக்கு இங்குள்ள கைதிகளே பயன்படுத்தப்படுகிறார்கள். Chongjin பகுதியில் அமைந்துள்ள முகாம் 25ல் சுமார் 5,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தூக்கு மேடைகள், மின்சார வேலிகள் மற்றும் தகன மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு முகாம்களிலும் தோராயமாக 53,000 முதல் 65,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றே ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிகக் கொடூரமான முகாம் என அறியப்பட்ட முகாம் 15 திடீரென்று மூடப்பட்டது.
ஆனால் கசிந்த தகவலின் அடிப்படையில், அங்குள்ள கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு முகாம்களுக்கு மாற்றப்படவோ அல்லது மரணம் வரையில் கட்டாய உழைப்பு போன்ற தண்டனைக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.
216 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள முகாம் 16ல் இருந்து இதுவரை ஒரு கைதி கூட தப்பியதில்லை என்றே கூறப்படுகிறது. இயந்திர துப்பாக்கி கோபுரங்களுடன் உயர் பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட இந்த முகாமில் 20,000 கைதிகள் வரையில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
அரசுக்கு விசுவாசம் இல்லாத மூத்த அதிகாரிகள் உட்பட பலர் இந்த முகாமில் தண்டனை அனுபவிக்கின்றனர். இங்குள்ள கைதிகள் சுரங்கங்கள், மரம் வெட்டும் இடங்கள் மற்றும் பண்ணைகளில் நாளுக்கு 20 மணி நேரம் வரையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவே தகவல் கசிந்துள்ளது.