Paristamil Navigation Paristamil advert login

1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

18 ஐப்பசி 2025 சனி 12:35 | பார்வைகள் : 160


தமிழக அரசு, 2023 - 24ல் அறிவித்த, 1540 திட்டங்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில், 14,808 கோடி ரூபாய் செலவிடப்படாமல், முழுமையாக மீண்டும் அரசுக்கு திரும்ப வழங்கப்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 2023 - 24 நிதி ஆண்டுக்கான, மாநில அரசின் நிதி நிலை மீதான கணக்கு தணிக்கை அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக அரசு, 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், அதிகமான கொள்கை முடிவுகளை அறிவித்தது. ஆனால், வரவு செலவு திட்டத்தை பகுப்பாய்வு செய்ததில், பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஏராளமான அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் அமலாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான அறிவிப்புகள், நடைமுறையில் உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாக அல்லது நீட்டிப்பாக இருந்தன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய், 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் முக்கிய கொள்கை அறிவிப்புகளான, ''பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்'' ''எண்ணும் எழுத்தும்'' ''நான் முதல்வன்'' போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

''தமிழக உலக புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி மையம்'' என்ற திட்டம், 120 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட, 20 கோடி ரூபாயில், எந்த செலவும் செய்யாமல், முழுமையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 14,808 கோடி ரூபாய், செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்