Paristamil Navigation Paristamil advert login

மெஹுல் சோக்சி; இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு

மெஹுல் சோக்சி; இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு

18 ஐப்பசி 2025 சனி 05:05 | பார்வைகள் : 834


வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். அவர், ஏற்கனவே அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார்.இதற்கிடையே, மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் முயற்சியை துவங்கியது. இந்நிலையில்,வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையின் பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகும்.

அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சோக்சி உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்