Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

எடை அதிகரிப்பும்... உடற்பயிற்சியும்...

எடை அதிகரிப்பும்... உடற்பயிற்சியும்...

8 புரட்டாசி 2020 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 15622


 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உடற்பயிற்சி கூடம், யோகா உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துவிடுகிறோம். ஆனால், ஆர்வக்கோளாறில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று நாமும் பின்பற்றுகிறோம்.

 
உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே சில தவறுகளையும் செய்கிறோம். இந்த தவறுகளே சில நேரங்களில் நீங்கள் அடைய விரும்பிய உடல் அளவு லட்சியத்திற்கு இடையூறாகவும் இருந்துவிடும். உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்தில் பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்று நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்கள். அவற்றை அறிந்துகொள்வோம்.
 
 
‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள். அவர் அந்த வேலையை பார்த்துக் கொள்வார். எந்த அளவிற்கு உடற்பயிற்சி மீது மோகம் அதிகரித்திருக்கிறதோ, அதையும் தாண்டி, ஊட்டச்சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை ஒரு பேஷனாகவே மாற்றிவிட்டார்கள். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே இவற்றை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை.
 
நாம் ஒன்றும் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சிகள் செய்துவிடப் போவதில்லை. சாதாரணமாக உடற்பயிற்சி கூடத்தில் செய்யும் ஆரம்பநிலைப் பயிற்சிகளுக்கு நாம் வழக்கமாக சாப்பிடும் சத்தான உணவே போதுமானது.
 
உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி இருப்பது மாபெரும் தவறு. சிலர் ஒல்லியாக வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 1000 கலோரி அளவுக்கு மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கலோரிகள் அளவை குறைப்பதால் மட்டுமே ஒருவர் உடனடியாக ஒல்லியாக முடியாது. இந்தப் பழக்கம் நாளடைவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையையும், வளர் சிதை மாற்றக் குறைபாட்டையும் ஏற்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இப்படி பட்டினி இருப்பதற்குப் பதில், உணவுக்கட்டுப்பாட்டோடு, குறைந்தபட்சம் வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் மட்டுமே உடல் பருமனை குறைக்க முடியும்.
 
இன்டர்நெட்டிலும், சாட்டிங்கிலும் இரவில் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு நேரத்தை செலவிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாம் கடைபிடித்தும் எடைஇழப்பு ஏற்படவில்லையே என்று வருத்தப்பட்டு பயனில்லை. வாரத்தில் 1, 2 நாட்கள் போதிய தூக்கம் இல்லாவிட்டாலும் கூட, மனஅழுத்தம் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது வேலைகளில் செயல்திறனை குறைத்துவிடும். நாளடைவில், தசைகளில் பலவீனத்தை ஏற்படுத்தி அதுவே மீண்டும் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்