Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?

தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?

27 புரட்டாசி 2020 ஞாயிறு 06:32 | பார்வைகள் : 16265


 வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி, மனதிற்கு இதமாக இருந்தாலும், உடலுக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது. வேலைப்பளு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.

 
* ஏன் தூங்கவேண்டும்?
 
 
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது.
 
* யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்?
 
தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. ‘ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாக தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி, பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்கவேண்டும். பதின் பருவத்தினர் 9 முதல் 10 மணி நேரமும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் 7 முதல் 10 மணி நேரமும் தூங்கவேண்டும். முதியவர்கள் 8 முதல் 12 மணி நேரம் தூங்குவது சிறந்தது.
 
* நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்?
 
வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.
 
* தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?
 
சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை தெரிந்துகொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!

வர்த்தக‌ விளம்பரங்கள்