Paristamil Navigation Paristamil advert login

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வியூகம்

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வியூகம்

2 ஐப்பசி 2025 வியாழன் 23:17 | பார்வைகள் : 102


கரூர் நெரிசல் பலி சம்பவத்தை தொடர்ந்து நிலவும் பதற்றமான அரசியல் சூழலில், நடிகர் விஜய்க்கு வழங்கப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக அரசியலை பொறுத்த வரை, தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் வரை, தொடர்ச்சியாக அக்கூட்டணியே பெரும் வெற்றி அடைந்துள்ளது. அதனால், தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி இருந்தால் தான், அக்கட்சியை வீழ்த்த முடியும் என்று பா.ஜ. நினைக்கிறது. அதற்காகவே, லோக்சபா தேர்தலுக்கு முன், தே.ஜ. கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க.வை, மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளார், மத்திய அமைச்சர் அமித் ஷா.

இருப்பினும், தி.மு.க. கூட்டணியை, தற்போதைய அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியால் வீழ்த்த முடியாது என, சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அதனால், தமிழக அரசியலில் புது வரவாக இருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை, எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா முடிவெடுத்து, அதற்கேற்ப காய் நகர்த்தல்களை துவங்கி உள்ளார்.

ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பது போலவே, அ.தி.மு.க.வையும் பா.ஜ.,வையும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததால், பழனிசாமியும், அமித் ஷாவும், இந்த விஷயத்தில் என்ன செய்வது என புரியாமல் தவித்தனர்.

இச்சூழ்நிலையில் தான், கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை பெரிதாக்கி, தொடர்ந்து அரசியல் செய்வதன் வாயிலாக, தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியும் என, அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் நம்புகின்றன.

அதனால், கரூர் சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க. தரப்பு தான் இருக்கிறது என்று சொல்லும் த.வெ.க.வினர் கருத்தை, அ.தி.மு.க.வினரும், பா.ஜ.வினரும் வழி மொழிகின்றனர். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும், ஒரு நபர் கமிஷனின் விசாரணை நியாயமாக இருக்காது; விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒரே குரலில், பா.ஜ.வும், அ.தி.மு.க.வும் சொல்வதன் பின்னணியில் கூட்டணி கணக்குகளே உள்ளன.

இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில், நடிகர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது, 'தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் விஜயும் இணையலாம்' என்ற அறிகுறியை ஏற்படுத்தியது.

விஜயுடனான தனது பேச்சில் அதை உணர்த்திய அமித் ஷா, 'கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. அதனால், ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்தில், தி.மு.க.வை முழுமையாக குற்றம் சாட்டுவதால், அக்கட்சியினர் விஜய் மீது கோபத்தில் இருப்பர்; அதனால், த.வெ.க. தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரசார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா.

இதன்தொடர்ச்சியாக, தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும், சி.ஆர்.பி.எப். பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி இருக்கிறது.

நெருக்கடியான சூழலில், ஆதரவாக இருப்பதன் வாயிலாக, த.வெ.க. தலைவர்களும், தொண்டர்களும் அ.தி.மு.க., - பா.ஜ. - த.வெ.க. கூட்டணிக்கு தலைமையை வலியுறுத்துவர் எனவும் திட்டமிட்டே, அதற்கேற்ப காய்களை நகர்த்துகிறார் அமித் ஷா.

ஒருவேளை, எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுப்பது போன்று, கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தின் விசாரணை, சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டால், சி.பி.ஐ. அதிகாரிகளை வைத்து, தி.மு.க.வினருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் செய்ய, அமித் ஷா தரப்பு திட்டமிட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் அமித் ஷா நினைப்பது போல எதுவும் நடந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் தி.மு.க. தரப்பு ஆழ்ந்துள்ளது. 'கரூர் வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தால், நிச்சயம் அது தி.மு.க.,வை நோக்கித்தான் பாயும். தேர்தல் நெருக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, மொத்த தி.மு.க.வையும் தேர்தல் வேலை பார்க்க விடாமல் செய்வர்' என, அமித் ஷா திட்டங்களை அறிந்த தி.மு.க. தலைவர்கள், தலைமையிடம் எடுத்துக் கூறி உள்ளனர்.

இதையடுத்து, இந்த விஷயத்தை சாதுர்யமாக எதிர்கொள்வதே, கட்சிக்கும் தலைமைக்கும் நல்லது என முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார். அதனால், இந்த விஷயத்தில், வேகமாக செல்ல வேண்டாம் என, பா.ஜ. தரப்பை, குறிப்பாக, அமித் ஷாவை இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள் வாயிலாக சமாதானப்படுத்தும் முயற்சியிலும் தி.மு.க. தரப்பு களம் இறங்கி உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்