19 புரட்டாசி 2021 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 11882
உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் (Elon Musk) இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration 4), என்னும் விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான மிஷன் தொடங்கினார். இது பொது மக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் லட்சிய திட்டம் ஆகும்.
இந்த இன்ஸ்பிரேஷன் 4 என்னும் மிஷனில் வியாழக்கிழமை, 'பால்கன் 9' ராக்கெட், விண்வெளிக்கு, சுற்றுலா பயணிகள் 4 பேரை சுமந்து செல்லும் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்வெளியில், ஈர்ப்பு விசையற்ற இடத்தில் எப்படி வசிப்பது குறித்த பயிற்சிகள் இந்த 4 பேர்களுக்கும் கடந்த ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 12 நிமிடங்களில், வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. இந்த விண்கலம் 3 நாட்களுக்கு பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் சுற்றி வந்தது.
இந்நிலையில், விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் பத்திரமாக தரையிறங்கினர். இவர்கள் தரையிறங்கும் காட்சி யூட்யூபில் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சனிக்கிழமை அட்லாண்டிக்கில் புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை போலவே, கடந்த ஜூலை மாதம் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. வர்ஜின் கேலக்டிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழுவினர் விண்வெளிக்குச் சென்று சில நிமிடங்கள் மிதந்து விட்டு பூமிக்குத் திரும்பினர். பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்.
தற்போது ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கியுள்ள முதல் விண்வெளி சுற்றூலா பயணத்தில், அதன் தலைவர் எலான் மஸ்க்கும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பயணிக்காமல், சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.