Paristamil Navigation Paristamil advert login

அரசு அலுவலகங்களில் அத்துமீறும் த.வெ.க.,வினருக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை

அரசு அலுவலகங்களில் அத்துமீறும் த.வெ.க.,வினருக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை

23 வைகாசி 2026 சனி 14:34 | பார்வைகள் : 1382


அரசு சார்ந்த விவகாரங்களில், தமிழக வெற்றிக் கழகத்தினர் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் கூடாது' என, அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணி அரசு அமைத்த நாளில் இருந்து, அந்த கட்சியின் நிர்வாகிகள், தமிழகம் முழுதும் ஆய்வு என்ற பெயரில், அரசு அலுவலகங்களுக்கு செல்கின்றனர். அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். இதையடுத்து அவர்களை முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், த.வெ.க., மாவட்ட செயலர்களின், 'வாட்ஸாப்' குழுவில் அமைச்சர் ஆனந்த் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், மனசாட்சியுள்ள மக்களாட்சி அமைந்துள்ளதை, மக்கள் மனங்குளிர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். இச்சூழலில், நமக்கான பொறுப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. நம் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, மக்களுக்கு சேவை செய்யத்தான்.

எனவே கட்சியினர், பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும்; தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கட்சிக்கும், முதல்வர் விஜய்க்கும் எவ்விதத்திலும் களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நம் கட்சியினர், அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.