Paristamil Navigation Paristamil advert login

வேகமாக பரவும் எபோலா வைரஸ்; சர்வதேச விமான நிலையங்கள் உஷார் நிலை!

வேகமாக பரவும் எபோலா வைரஸ்; சர்வதேச விமான நிலையங்கள் உஷார் நிலை!

23 வைகாசி 2026 சனி 12:42 | பார்வைகள் : 1030


எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. சளி, இருமல், காய்ச்சலுடன் வரும் பயணியரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இதை கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்க தவறினால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட பல விமான நிலையங்களில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, விமான நிலைய சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை கிடையாது. இருப்பினும், இணைப்பு விமானங்களில் தமிழகம் வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணியர், கட்டாயம் சுய அறிவிப்பு படிவத்தில் தகவல்களை எழுதி தர வேண்டும். விமானங்களிலும் எபோலா நோய் அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அறிவிப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.

பயணியருக்கு தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

பயணியரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படும். காய்ச்சல் அதிகம் உள்ள பயணியரை தனிமைப்படுத்தி, தனி ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று, தனி வார்டுகளில், 21 நாட்கள் தீவிர கண்காணிப்புகளில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.